அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 27) சற்று நேரத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார்.
செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று அவர் தவெகவில் இணைவது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன் தலைமையில், அதிமுகவில் அதிருப்தியில் இருந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் இன்று தவெகவில் தங்களை இணைத்துக் கொள்ள உள்ளனர்.
இணையும் முக்கிய நிர்வாகிகள் பட்டியல்!
இன்று தவெகவில் இணையும் முக்கியப் பிரமுகர்களின் பட்டியல் பின்வருமாறு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், மற்றும் முன்னாள் யூனியன் தலைவர்களான மௌனஸ்வரன், பி.யு. முத்துசாமி ஆகியோர் ஆவர். ஈரோடு மாவட்டத்தில் வலுவான செல்வாக்கு கொண்ட செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த இணைப்பு, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் தவெகவுக்குப் புதிய பலத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
