முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடங்கிய புதிய பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

முதலமைச்சருக்கு தற்போது ‘கேர்செல்’ என்ற பெயரில் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வெடிகுண்டு தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வாகனங்களில் அவரின் பயணங்கள் நடைபெறுகின்றன. கைப்பேசி சிக்னல்களை முடக்கும் ஜாமர் கருவிகள் உள்ள வாகனங்களும் இதில் அடங்கும்.

இந்த நிலையில், முதல்வரின் இல்லம், அலுவலகம் மற்றும் அவர் பயணிக்கும் முக்கிய சாலைகளில் உயர் தொழில்நுட்பக் கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள், முக அடையாளம் அறியும் கேமராக்கள் மற்றும் வாகனப் பதிவெண் (ANPR) கண்காணிப்பு கேமராக்கள் உட்பட மொத்தம் 110 கேமராக்கள் 29 இடங்களில் நிறுவப்படும்.

மேலும், இந்த முழுமையான கண்காணிப்பை ஒருங்கிணைக்க வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.

இந்த மையத்தின் மூலம், முதல்வரின் இல்லம் மற்றும் அவரைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் — செனடாப் சாலை, டி.டி.கே சாலை, எல்டாம்ஸ் சாலை, நந்தனம் சிக்னல், கே.பி.தாசன் சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, கதீட்ரல் சாலை, அண்ணாசாலை, சிவசங்கரன் சாலை, திருவள்ளூர் சாலை, தேனாம்பேட்டை சிக்னல் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்படும்.

இவை மட்டுமன்றி, சந்தேகத்துக்குரிய நபர்கள் அருகே சென்றால், அல்லது ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்கள் நடைபெற்றால், செயற்கை நுண்ணறிவு சிக்னல்கள் மூலம் காவல்துறையினருக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படும்.

இதன் மூலம், முதலமைச்சருக்கான பாதுகாப்பு பல மடங்கு மேம்படும் எனவும், தற்போது இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப் பணிகளை சென்னை காவல்துறை தொடங்கியுள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.