தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், நாமக்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் ஏற்கனவே கூறியது போல், மீண்டும் ஒருமுறை தெளிவாகச் சொல்கிறேன். பாசிச பாஜகவுடன் எப்போதும் கூட்டணி ஏற்படுத்த மாட்டோம். அதேபோல், திமுக போன்று பாஜகவுடன் மறைமுக உறவிலும் இருக்கமாட்டோம்,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: “மூச்சுக்கு முன்னூறு முறை ‘அம்மா, அம்மா’ எனச் சொல்லிக்கொண்டே, ஜெயலலிதா கூறிய வழிமுறைகளை முற்றிலும் மறந்து, பொருந்தாத கூட்டணியில் சேர்ந்துவிட்டு, ‘தமிழக நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம்’ என கூறும் கட்சிகளைப் போல நாம் ஒருபோதும் இருக்கமாட்டோம்.”
மேலும், பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை சுட்டிக்காட்டிய அவர்: “நீட் தேர்வை ரத்து செய்ததுண்டா? கல்விக்கான நிதியை முழுமையாக வழங்கியதுண்டா? தமிழ்நாட்டிற்கு தேவையான எந்த விஷயத்தையும் செய்ததுண்டா? அப்படியிருக்க, இந்த சந்தர்ப்பவாத கூட்டணி எதற்காக?” என்றார். இது தனிப்பட்ட கேள்வி அல்ல என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்களின் கேள்வி எனவும் தெரிவித்தார்.
மேலும் “அவர்கள் கூட்டு, பொரியல், அப்பளம் என எதையாவது செய்யட்டும். நமக்கு அது தேவையில்லை,” என கூறி தனது உரையை முடித்தார்.
