தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை புதிய எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பதவியேற்ற நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் மட்டும் அதில் பங்கேற்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா அல்லது அதிமுக தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறாரா என்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் சட்டப்பேரவையில் உள்ள தற்காலிக சபாநாயகரின் அறைக்குத் தனியாக வந்து தனது பதவியைப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார்.
மற்ற எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து பதவியேற்காமல், இப்படித் தனியாக வந்து சபாநாயகர் அறையில் பதவியேற்றது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுக-வுக்குள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினரிடையே மோதல் முற்றியுள்ள நிலையில், சி.வி.சண்முகம் தனது தனித்துவத்தைக் காட்டவே இப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், தவெக-வுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ள 36 எம்.எல்.ஏ-க்களின் அணிக்கு இவர்தான் தலைமை தாங்குகிறாரா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
