மத்திய ஜகார்த்தாவில் உள்ள செனன் பகுதியில் இருக்கும் கிராமாட் புலோ பூங்காவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எம்.டபுள்யூ.பி  என்ற அந்த சிறுவன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஆரம்பத்தில், பூங்காவில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியதால் தான் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவனது குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், பூங்காவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், அந்த சிறுவன் எல்.என்.ஜி (LNG) மற்றும் ஆர்.வி.என் (RVN) ஆகிய இருவரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டது தெரியவந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளில், சிறுவனை அந்த நபர்கள் தரதரவென இழுத்துச் சென்று, மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மின் கம்பத்தின் மீது வலுக்கட்டாயமாக தள்ளியுள்ளனர். இதனால் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவனைத் தூக்கி தரையில் அடித்ததால் தலைக்கு பின்னாலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

மயங்கி விழுந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் எழுப்ப முயற்சி செய்து, மூக்கு வழியாக பாலை ஊற்றியது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுவனின் பாட்டி லிண்டா ரெஸிலின் (56) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுவன் கோமா நிலைக்குச் சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாதது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.