இந்தியாவிற்கு முதன்முறையாகச் சுற்றுலா வந்துள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா படாலாஸ்-கல்ரா என்ற பெண் பயணி, டெல்லி நோக்கி மேற்கொண்ட தனது 11 மணி நேரப் பேருந்துப் பயண அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தங்களுக்குச் சாதகமான முறையில் உள்கட்டமைப்புகள் இருக்குமா மற்றும் இந்த நீண்ட தூரப் பயணம் பாதுகாப்பாக அமையுமா என்ற அச்சத்துடன் இருந்த அவருக்கு, இந்த அனுபவம் முற்றிலும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

தான் பயணித்த பேருந்து மிகவும் சுத்தமாகவும், நவீன வசதிகளுடனும், சரியான நேர மேலாண்மையுடனும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இருக்கைகள் அகலமாகவும் சொகுசாகவும் இருந்ததாகப் பாராட்டியுள்ளார். மேலும், பயணம் தொடங்கியதும் ஈரமான திசுத்தாள்கள பற்குச்சிகள், தின்பண்டங்கள் மற்றும் பழச்சாறு அடங்கிய ஒரு பரிசுப் பை வழங்கப்பட்டதாகவும், கம்பளியைப் போர்த்திக்கொண்டு நிம்மதியாகத் தூங்கியபடியே பயணித்ததாகவும் அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

<a href="http://

“>

மாலை நேரத்தில் ஒரு நல்ல உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, அங்கு ஐந்து விதமான சுவையான உணவுகளுடன், இனிப்பிற்கு குலாப் ஜாமூனும் தங்களுக்கு வழங்கப்பட்டதாக டொமினிகா குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, காலையில் எழுந்தவுடன் சிற்றுண்டிப் பெட்டி ஒன்றும் கொடுக்கப்பட்டதால், பயணம் முழுவதும் பசி என்ற உணர்வே தனக்கு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவரது இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த இந்திய இணையவாசிகள், “வழக்கமாகக் குறைகளை மட்டுமே பேசும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்தியில், இந்தியாவின் வளர்ந்து வரும் நேர்மறையான பக்கத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் உலகிற்குக் காட்டியதற்கு நன்றி” எனப் பாராட்டி வருகின்றனர். இந்தியா இன்னும் முழுமையான நிறைவை எட்டாவிட்டாலும், நாளுக்கு நாள் தொழில்நுட்பத்திலும் சேவையிலும் சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து வருவதை இந்தச் சம்பவம்காட்டுவதாகப் பலரும் பெருமிதத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.