வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், அவரது கணக்கில் உள்ள வைப்புத்தொகை யாருக்குச் சேரும் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கை. இத்தகைய சூழ்நிலைகளில், கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனதாரர்
மிக முக்கியப் பங்கு வகிக்கிறார். ஒரு கணக்கிற்கு நியமனதாரரை நியமிப்பது, மரணத்திற்குப் பிறகு பணத்தை எவ்விதத் தடையுமின்றி மாற்றுவதற்கு வழிவகுப்பதோடு, குடும்பத்தினரிடையே ஏற்படும் வாரிசுரிமைச் சண்டைகளையும் சட்டச் சிக்கல்களையும் தவிர்க்க உதவுகிறது.
கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு, நியமனதாரர் எவ்வளவுகாலத்திற்குள் பணத்தைக் கோர வேண்டும் என்று வங்கி விதிகளில் தனியாகக் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து அணுகினாலும் உரிய ஆவணங்கள் இருந்தால் கோரிக்கையை வங்கிகள் நிராகரிப்பதில்லை. இருப்பினும், நீண்ட நாட்களாகக் கோரப்படாத வைப்புத்தொகைகள், இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் உள்ள வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும்.
அவ்வாறு பணம் மாற்றப்பட்டாலும், நியமனதாரர் முறையான ஆதாரங்களைச் சமர்ப்பித்து எப்போதும் தங்களது தொகையைத் திரும்பப்பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் தொகையைப் பெறுவதற்கு, கணக்கு வைத்திருப்பவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுதாரரின் அடையாள ஆவணங்கள் (பான் கார்டு போன்றவை) மற்றும் வங்கி கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலைகளில் குடும்ப உறுப்பினர்கள் வங்கிகளுக்கு அலைவதைத் தவிர்க்கவும், சட்டப் போராட்டங்களைக் குறைக்கவும், ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பவரும் தனது வாரிசுதாரர் விவரங்களை வங்கியில் முறையாகப் பதிவு செய்து அதைத் தன் குடும்பத்தினருக்குத் தெரிவிப்பது அவசியமான ஒன்றாகும்.
