கிராமத்து எதார்த்தங்களை வெள்ளித்திரையில் அழியாத காவியங்களாக மாற்றிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, தனது எண்பத்தி நான்காவது வயதில் உடல்நலக்குறைவால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மண்ணில் பிறந்து நாடகங்கள் மீது கொண்ட ஈர்ப்பால் சென்னைக்கு வந்த இவர், தொடக்கத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் அளவிற்குப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார். மக்கள் மனதில் எளிமையாகப் பதிய வேண்டும் என்பதற்காகத் திரையுலகிற்கு வரும்போது தனதுசின்னசாமி’ என்ற பிறப்புப் பெயரை மாற்றிக்கொண்டார்.

திரையுலகில் அவர் சூட்டிக்கொண்ட ‘பாரதிராஜா’ என்ற பெயருக்குப் பின்னால் ஒரு ஆழமான குடும்பப் பாசம் ஒளிந்திருந்தது; தனது சகோதரி ‘பாரதி’ மற்றும் சகோதரர் ‘ராஜா’ ஆகியோரின் பெயர்களை இணைத்தே அவர் இந்தப் பெயரை உருவாக்கிக் கொண்டார். அண்மைக் காலத்தில் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு இவரை மனதளவில் பெரிதும் பாதித்திருந்த நிலையில், தற்போது இவரது மறைவையடுத்து தமிழக முதல்வர் விஜய், பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் திரையுலகில் தனக்கு ஒரு தனி முத்திரையைப் பதித்தது மட்டுமன்றி, பல ஆளுமைகளை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

குறிப்பாக, ‘R’ என்ற எழுத்தின் மீது இருந்த ரகசிய ராசியால் தான் அறிமுகப்படுத்திய ராதிகா, ராதா, ரேகா போன்ற பல நாயகிகளின் பெயர்களை மாற்றி திரையுலகிற்குத் தந்தார். இளையராஜா, கங்கை அமரன் ஆகியோருடன் பக்கத்து கிராமத்து நண்பராக இணைந்து நாடகங்கள் நடத்திய இவர், சென்னைக்கு வந்து இளையராஜாவின் இசைப்பயணத்திற்கும் ஒரு முக்கியப் புள்ளியாக அமைந்தார்.

அதுமட்டுமன்றி, பாக்யராஜ், மணிவண்ணன், பாண்டியராஜன்,மனோபாலா போன்ற முன்னணி இயக்குனர்களையும், கவுண்டமணி உள்ளிட்ட சிறந்த கலைஞர்களையும் திரையுலகிற்குத் தந்த பெருமை இவரையே சாரும். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற திரைப்படத்தை இறுதியாக இயக்கிய இந்த மாபெரும் கலைப்படைப்பாளியின் மறைவு, தமிழ் சினிமாவின் ஒரு பொற்கால அத்தியாயத்தின் நிறைவாகக் கருதப்படுகிறது.