செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மூத்த மகனின் பிறந்த நாள் விழாவை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து சிறப்பாக கொண்டாடியதில் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

அப்போது குடும்பத்தினர் பிரேமலதாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரேமலதா நேற்று காலை 8 மணிக்கு தனது 4 வயது மகன் ஆயுஷ்வை தூக்கிக்கொண்டு ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அந்த சமயம் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு வேகமாக ரயில் வந்தது.

இதனையடுத்து மின்சார ரயில் இன்ஜின் டிரைவர் ஹாரன் அடித்தும் பிரேமலதா, குழந்தையுடன் தண்டவாளத்தில் நடந்து வந்ததால் சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர் பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளார். ஆனாலும் பிரேமலதா மற்றும் அவர் மகன் மீது ரயில் மோதி நின்றதால் இருவரது தலையிலும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் தாய், மகன் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் ரயிலை நிறுத்திய டிரைவரை பயணிகள் பாராட்டியுள்ளனர்.