தூத்துக்குடி போல்பேட்டை டி.எம்.சி. காலனி பகுதியில் மது போதை ஒரு குடும்பத்தையே ரத்தக் களறியாக்கியுள்ளது. மாரிமுத்து (23) என்ற வாலிபர், மது குடிப்பதற்காகத் தனது பாட்டி கருப்பாயி அம்மாளிடம் (62) பணம் கேட்டுத் தொல்லை செய்துள்ளார்.

கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் போதைக்காகக் கொடுக்க பாட்டி மறுத்ததால், ஆத்திரமடைந்த பேரன் மாரிமுத்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாட்டியைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.

போதைக்காகப் பெற்றவள் போலவே வளர்த்த பாட்டியைக் கொல்ல முயன்ற இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேரன் வெட்டியதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கருப்பாயி அம்மாளை, அக்கம் பக்கத்தினர் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

உயிருக்குப் ஆபத்தான நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துத் தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரன், உடனடியாக விரைந்து சென்று மாரிமுத்து மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தார்.

போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதும், சொந்தக் குடும்பத்தையே தாக்குவதும் பெரும் கவலையை ஏற்படுத்துவதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.