ஈரான் மீது இதுவரை வான்வழியாகத் தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா இனி தரைவழியாகவும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில் ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் அந்நாட்டு ராணுவத்தின் கடுமையான எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது.
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டால் அது தங்களின் சிவப்புக் கோட்டைத் தாண்டுவதற்குச் சமம் என்றும் அத்தகைய சூழலில் எதிரிகளுக்குப் பெரிய ஆச்சரியத்தைக் காத்திருப்பதாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாகத் தங்களின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளையும் செயலிழக்கச் செய்வோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏதேனும் தவறு செய்தால் ஈரானிய மண்ணில் இருந்து அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளைக் கூட அவரால் அகற்ற முடியாது என்று ஈரான் ராணுவத்தின் அறிக்கை மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைத்தளங்களைத் தேடிப் பிடித்துத் தாக்கி வரும் ஈரான் தற்போது தரைவழிப் போருக்கும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
