ஈரான் எல்லையிலிருந்து சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரிட்டனுக்குச் சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) தீவை இலக்கு வைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. இந்த அதிரடித் தாக்குதலால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பிராந்தியங்களைக் கண்காணிப்பதற்காக டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க ராணுவப் படைகளை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதி அளித்திருந்தது. இங்கிருந்துதான் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அமெரிக்கக் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன.
சமீபத்தில் போர் தொடங்கிய சில நாட்களில், இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது. இதில் 84 ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தற்போது டியாகோ கார்சியா தீவு தாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, கடந்த மாதம் அளித்த பேட்டியில், “ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க விரும்புவதில்லை; எனவே எங்களது ஏவுகணைகளின் இலக்கு வரம்பை (Range) 2,000 கிலோமீட்டராகக் குறைத்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஈரான் துல்லியமாகத் தாக்கியுள்ளதன் மூலம், தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் உண்மையான வலிமையை ஈரான் ரகசியமாக வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகள் இந்தத் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன.
