அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் தெரியுமா? சாதாரண மனிதர்கள் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பெரும் தொகைக்கான அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வெளியாகி உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. பிரபல இந்தியத் தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா வெளியிட்டுள்ள ஒரு சமூக வலைதளப் பதிவுதான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் குடியரசுக் கட்சியின் தேசியக் கமிட்டி சார்பில் வரவிருக்கும் முன்னணி நிகழ்வுக்கான பிரத்யேக அழைப்பிதழ் ஒன்றை ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “யாருக்காவது டிரம்புடன் புகைப்படம் எடுக்க ஆசை இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் 80 லட்சத்திற்கும் மேல் செலுத்த வேண்டியிருக்கும்” என்று அவர் ஆச்சரியக் குறியுடன் குறிப்பிட்டுள்ள அந்தப் பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Anybody wants a photo-op with Trump, you will have to pay over Rs 80 lakhs. 😱 pic.twitter.com/zQpo0El9iu
— Harsh Goenka (@hvgoenka) August 18, 2026
வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஹூஸ்டன், டெக்சாஸில் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மாலையில், டிரம்பை நேரில் சந்தித்து உரையாடுவதற்கான கட்டண விவரங்கள் தான் அனைவரையும் உலுக்கியுள்ளன. இந்த நிகழ்வில் தம்பதியினருக்கு ஒரு “புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு” பெற வேண்டுமென்றால், இந்திய மதிப்பில் 80 லட்சம் ரூபாயைத் தாண்டும் விதமாக 88,600 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மற்ற கட்டண விவரங்களும் மலைக்க வைக்கும் அளவில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வட்டமேஜை சந்திப்பில்பங்கேற்க $250,000 என்றும், முக்கிய வரவேற்புக் குழுவில் இணைந்து செயல்பட $443,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வழக்கமான சாதாரண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் கட்டணம் $10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசியல் நிகழ்வுகளில் செல்வாக்கு மிக்கவர்களின் அருகாமை மற்றும் பிரமுகர்களின் சந்திப்புகளுக்கு இவ்வளவு பெரிய தொகையா என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தீவிரமாகப் பேசி விவாதித்து வருகின்றனர். அரசியல் தளத்தில் இவ்வளவு அதிகளவிலான நிதிப் பங்களிப்பு மற்றும் ஆடம்பரப் பிம்பம் குறித்த இந்த விவகாரம் தற்போது உலகளவில் பெரும் விவாதப் புள்ளியாக மாறியுள்ளது
