சண்டிகரில் மின்சாரம் அல்லாத அதாவது, பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதி ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சண்டிகர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையானது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர் வாகனப்பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களின் பதிவு பிப்ரவரி 10 முதல் மார்ச் இறுதிவரை தடைசெய்யப்பட்டுள்ளது.
வாகனப் பதிவு குறித்த இத்தடை காரணமாக வாகன விற்பனையாளர்கள் வாகனப்பதிவு பணியை கூட “வாகன்” போர்ட்டலில் முடிக்க முடியாமல் தவிப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால், இருசக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இனிமேல் உயர் பாதுகாப்பு எண் தகடு(HSRP) மற்றும் பதிவுச்சான்றிதழ்(RC) போன்றவற்றைப் பெற முடியாது. முன்பே இருசக்கர வாகனம் வாங்கியவர்கள் (அ) வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இம்முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.