கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூரில் இருக்கும் ஜெயந்தி மசாலா நிறுவன கட்டிடம் மேற்கூரையில் வேலூரை சேர்ந்த நந்தகுமார்(34) உள்ளிட்ட தொழிலாளர்கள் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரையில் நந்தகுமார் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணாடி சீட் உடைந்து நந்தகுமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் நந்தகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் நந்தகுமார் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.