சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கணசாலை நகராட்சி தூதனூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது பாவாயி என்பவர் விவசாயக் கூலி தொழிலாளியாகவும், 75 வயது பெரியம்மாள் ஆடுகளை வளர்த்து வாழ்ந்தும் வந்தார்.
இருவரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினர்; இரவு வரை திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணாததால், மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் இருவரும் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது.
விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன் உடல்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால், நகை லாபத்துக்காக மர்ம நபர்கள் அவர்களை கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்பதைப் பொலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் தவிப்பில் உள்ள நிலையில், போலீசார் மர்ம நபர்களைத் தேடி விசாரணையை விரைவுபடுத்தியுள்ளனர்.
