கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த குணா தவசி, சதீஷ், கார்த்திக் ஆகிய மூவரையும் தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த அந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மாணவியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ள நிலையில், அ.தி.மு.க.வினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மதுக்கரை பகுதியில், அ.தி.மு.க.வினர் பேருந்தில் பயணித்த பெண்களுக்குப் பெப்பர் ஸ்பிரே (Pepper Spray) வழங்கினர்.
“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை” என்று குற்றம் சாட்டிய அவர்கள், இந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்தும், பெண்கள் தங்கள் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வலியுறுத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பெப்பர் ஸ்பிரேக்களை வழங்கியதாகத் தெரிவித்தனர்.
