தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா என்பவர், சிறகுகள் போன்ற துடுப்புகளுடன் ஒரு மீன், மனிதனின் கையிலிருந்து பறந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை X தளத்தில் (முன்னர் ட்விட்டர்) பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஆர்வத்தையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியது. எனினும், இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர், இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மூலம் உருவாக்கப்பட்டது என உண்மை நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட அந்த வீடியோவில், சிறகுகள் கொண்ட ஒரு மீனை ஒருவர் பிடித்திருப்பது போலவும், சில கணங்களுக்குப் பிறகு அது காற்றில் பறந்து செல்வது போலவும் காட்சிகள் உள்ளன.

இதைப் பகிர்ந்த கோயங்கா, “பறக்கும் மீனை நான் பார்ப்பது இதுதான் முதல் முறை” என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் (Parveen Kaswan), “இது AI-யால் உருவாக்கப்பட்டது” என்று பதிலளித்துள்ளார்.

உண்மையில், பறக்கும் மீன்கள் அலைகளிலிருந்து விலகி, சிறிது தூரம் தண்ணீருக்கு மேலே சறுக்கிச் செல்லுமே தவிர, இப்படிச் சிறகுகளை அடித்து பறக்காது என்றும் பயனர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“AI-யால் இப்போது எது வேண்டுமானாலும் சாத்தியம்” என்றும், “இது AI-யின் அதீத பயன்பாடு” என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.