விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற துணை முதல்வரும், திமுக இளைஞர் அணியின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி திமுகவின் இலக்கை உறுதிப்படுத்தினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ராம சரவணனின் மகள் சாய்ஸ்ரீ மற்றும் ஜீனத் பிரியனின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில், “திராவிட மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இதன் விளைவாக, மத்திய அரசின் புள்ளிவிவரத்திலேயே தமிழ்நாடு 11.20% வளர்ச்சியுடன் முன்னிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது,” என தெரிவித்தார். “இந்த அரசு மக்களுக்காக செயல்படும் ஆட்சி என்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையில், நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்பதே நாம் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

“அடுத்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் திமுக கடந்த முறையைவிட பெரிய வெற்றி பெற வேண்டும். தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெற்றி என இலக்கை வைத்துள்ளார்.

அந்த இலக்கை அடைய நாம் அனைவரும் நம்முடைய உறவினர், நண்பர்கள், தெரு, கிராமம், நகரம் என அனைத்து இடங்களுக்கும் சென்று, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இப்படி செய்தால் முதலமைச்சர் கூறியபடி 200 தொகுதிகளில் மட்டுமல்லாமல் 200க்கும் அதிகமான இடங்களில் நாம் வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்தார்.