பங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. IndiGo விமான நிறுவன ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையில், போர்டிங் கேட் பகுதியில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. சம்பந்தப்பட்ட பயணி, விமானம் புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே வந்ததாகவும், ஆனால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறினார்.

IndiGo விமான நிறுவனத்தின் விதிமுறையின் படி, பயணிகள் விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 25 நிமிடங்களுக்கு முன்பே போர்டிங் கேட் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட பயணி நேரத்தை தவறவிட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட, அங்கு பணியாற்றிய பெண் ஊழியர் தன்னை ஆபாசமாக பேசியதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இந்த காட்சிகள் மற்றொரு பயணியின் மொபைலில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தைக் கண்ட நெட்டிசன்கள் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. “IndiGo ஊழியர்கள் பயணிகளை தள்ளுபடி வாடிக்கையாளர்களாகவே பார்க்கிறார்கள்” என ஒருவர் கடுமையாக விமர்சித்திருக்க, “15 நிமிடங்கள் முன்பு வந்தவரை எப்படி விமானத்தில் ஏற்ற முடியும்?” என மற்றொருவர் எதிர்மறையான கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக Gate 15/16 பகுதியில் இந்த மாதிரியான போர்டிங் மறுப்புகள் அடிக்கடி நடைபெறுவதாக பயணிகள் புகாரளித்து வருகின்றனர். கூடுதல் கட்டணத்தில் ரீ-புக்கிங் செய்து கொள்வதற்கு இது திட்டமிட்ட சூழ்ச்சியா என சந்தேகம் எழுந்துள்ளது.