கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மங்கலாபுரம் நோக்கிச் சென்ற வந்தே பாரத் இரயில் மீது மர்ம நபர் கல்வீசித் தாக்கியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழாம் தேதி இரவு ஆலுவா மற்றும் அங்கமாலி இடையே நெடும்பாஞ்சேரி விமான நிலையத்தின் அருகே இரயில் வந்து கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரயிலின் 9ம் எண் பெட்டியின் வெளிப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் அதில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்துத் தகவல் அறிந்த ஆலுவா இரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தண்டவாளத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பதினெட்டு வயது இளைஞர் ஒருவர் இரயில் மீது கல்வீசியது கண்டறியப்பட்டது. அந்த இளைஞரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தபோது தனது காதலி தன்னைத் தவிக்கவிட்டுச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதல் தோல்வியால் விரக்தியடைந்த நிலையில் அந்தச் சமயம் வந்த இரயில் மீது மூன்று முறை கற்களை வீசியதாகவும் அதில் ஒரு கல் பட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைக் கைது செய்த இரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
