பெங்களூரில் சைபர் குற்றச்செயல்கள் அன்றாடம் அதிகரித்து வரும் சூழலில், கல்வி, புகழ், பதவி என்ற பேதமின்றி மக்கள் அனைவரும் மோசடிக்குள்ளாகி வருகின்றனர். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் சைபர் மோசடிக்குள்ளாகி நிதியழிவை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.வின் மூத்த தலைவருமான சதானந்த கவுடா சைபர் கும்பலின் பிடியில் சிக்கி உள்ளார்.

பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, “நேற்று முன்தினம் எனது மூன்று வங்கிக் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டன. HDFC, SBI, மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகளில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 3 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்த மோசடி, GPay மற்றும் PhonePe போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் மூலமாக நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் போலீசில் முறையான புகார் அளிக்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதேபோல், சமீபத்தில் நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் மொபைல் ஹேக் செய்யப்பட்டு ரூ.55,000 பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சைபர் மோசடி கும்பல்கள் திரைமறைவில் இருந்து செயல்பட்டு நொடிப்பொழுதில் பணத்தை அபகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.