ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கண்டுயூலா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்றால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த சுகந்தி காரி என்ற பெண் ஆசிரியர், தன்னுடைய காலில் விழவில்லை என்ற காரணத்தால் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 31 மாணவ-மாணவிகளை கம்பியால் அடித்து சித்திரவதை செய்துள்ளார். பள்ளி ஜெபத்திற்குப் பிறகு ஆசிரியரின் ஆசிர்வாதம் பெறும் மரபை மாணவர்கள் பின்பற்றாததற்காகவே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஜெப நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்றது. ஜெபம் முடிந்ததும் மாணவர்கள் கிளம்பிய நிலையில், தாமதமாக வந்த ஆசிரியை சுகந்தி காரி, மாணவர்களை அழைத்து வரச் செய்து வரிசையாக நின்றபடி கடுமையாக அடித்துள்ளார். இதனால் ஒரு மாணவனுக்கு கை எலும்பு முறிவும், இன்னொருவர் மயங்கி விழுந்தும் உள்ளனர். உடனே மயங்கிய மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் சமீபத்தில் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கல்வித்துறையின் முதல் கட்ட விசாரணையில் ஆசிரியை சுகந்தி காரி மாணவர்களுக்கு அடித்தது உறுதியாகியதையடுத்து, அவரை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். பள்ளி முதல்வர் புர்ணச்சந்திர ஓஜா, வட்டக் கல்வி அலுவலர் பிப்லப் காரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவர்களின் சுகாதாரமும், எதிர்காலமும் பாதிக்கப்படக் கூடாது என பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.