திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேலின் மனைவி அம்சா (28). கடந்த மாதம் (அக்டோபர்) 15ஆம் தேதி தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளார்.

அதன் பிறகு அம்சா வீடு திரும்பாத நிலையில், அன்றிரவு 8 மணியளவில், எஸ்.கே.பி கல்லூரி அருகே ஒன்றரை வயதுக் கைக்குழந்தை நிவிலன் மட்டும் சாலையோரம் தனியாக அழுதுகொண்டிருந்தான். அங்கிருந்த பெண் ஒருவர் குழந்தையைப் பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதற்கிடையில், கிட்டத்தட்ட 25 நாட்களுக்குப் பிறகு, நேற்று (நவம்பர் 9, 2025) கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு கரும்புத் தோட்டத்திலிருந்து அழுகிய நிலையில் ஒரு சாக்குமூட்டையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அது காணாமல் போன அம்சா என்பது விசாரணையில் உறுதியானது.

அம்சாவைக் கொலை செய்தது யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா (30) மற்றும் அவரது ஆண் நண்பர் திருப்பதி ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த நேத்ராவை போலீசார் பிடித்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மருத்துவமனைக்கு வந்த அம்சாவைப் பார்த்த நேத்ரா, அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டு, வலுக்கட்டாயமாகத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே நேத்ராவும், அவரது ஆண் நண்பன் திருப்பதியும் சேர்ந்து அம்சாவைத் தாக்கி, சங்கிலியைப் பறித்ததுடன், அவர் வெளியில் சென்று போலீசில் புகார் அளிப்பார் என்று பயந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

அதன் பிறகு, உடலை சாக்குமூட்டையில் கட்டி கரும்புத் தோட்டத்துக்குள் வீசியதும், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகக் குழந்தையைச் சாலையோரம் தனியாக விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.