சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் கொத்து கொத்தாக உயிரிழந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு, திருவான்மியூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவற்றின் இறப்புக்கு எச்5என்1 ரக பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றே காரணம் என்று மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், நோய் பரவலைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இறந்து கிடக்கும் பறவைகளை எக்காரணம் கொண்டும் வெறும் கையால் தொடக் கூடாது என்றும், அவ்வாறு பறவைகள் உயிரிழந்து கிடந்தால் உடனடியாக உள்ளூர் மாநகராட்சி அல்லது கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து உண்ணவும், கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள் நுழைவதைத் தவிர்க்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள தமிழக அரசு, நோய் தடுப்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
