நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்க இருந்த நிலையில், அவரைத் தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள புகார் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சீன ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களைச் சுட்டிக்காட்ட முயன்றார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு தினங்களாக மக்களவையில் கடும் அமளி நீடித்து வந்தது.

நேற்று மாலை 5 மணிக்குத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அவைக்கு வரவில்லை. இது குறித்து இன்று விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா: “நேற்று மாலை பிரதமர் பேச இருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி மூத்த அமைச்சர்களின் இருக்கை அருகே சென்று அநாகரிகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பிரதமரைத் தாக்கச் சதித் திட்டம் தீட்டியிருந்தது எனக்குத் தெரியவந்தது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது நாடாளுமன்றத்திற்கே களங்கம் விளைவிக்கும் என்பதால், நான்தான் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்,” எனப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இன்று காலையும் எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டதால் அவையில் பதற்றம் நிலவியது. இந்த அமளிக்கு மத்தியிலேயே, பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார்.

அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து நிலவிய கூச்சல் குழப்பத்தால், மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.