உத்தரப் பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவன் ஒருவன், மோமோஸ் மீதான அதீத ஆசையால் தன் குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பான 85 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் தொலைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோமோஸ் கடை நடத்தி வந்த மூன்று இளைஞர்கள், அந்தச் சிறுவனின் ஆசையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

“வீட்டிலிருந்து விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வந்து கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் இலவசமாக மோமோஸ் தருவோம்” என ஆசை வார்த்தை கூறி அந்தச் சிறுவனை மூளைச்சலவை செய்துள்ளனர்.

இதனை நம்பிய அந்த ஏழாம் வகுப்பு மாணவன், வீட்டில் யாருக்கும் தெரியாமல் பீரோவில் இருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று அந்த வியாபாரிகளிடம் கொடுத்துள்ளான்.

சமீபத்தில் சிறுவனின் தந்தை பீரோவைத் திறந்து பார்த்தபோதுதான், சுமார் 150 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுவனிடம் விசாரித்தபோது, மோமோஸுக்காக நகைகளைத் திருடிச் சென்ற உண்மையை அழுதுகொண்டே ஒப்புக்கொண்டான்.

தகவலறிந்த உடனடியாக கடைக்குச் சென்றபோது, அந்த மூன்று இளைஞர்களும் கடையைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்துப் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் அறியாமையைப் பயன்படுத்தி ஒரு குடும்பத்தின் மொத்த சொத்தையும் பறித்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.