டெல்லியை அடுத்த காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர்களின் அறையில் கண்டெடுக்கப்பட்ட (Diary மூலம் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது காசியாபாத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 9-வது மாடியில் இருந்து குதித்து மூன்று சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமிகளின் அறையைச் சோதனையிட்டபோது சிக்கிய நாட்குறிப்பில், அவர்கள் ஆங்கிலத்தில் தற்கொலைக் குறிப்பு எழுதியுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “நாங்கள் செய்த தவறுக்காக மன்னிக்கவும் அப்பா. எங்களுக்கு கொரிய மொழி மற்றும் கே-பாப் (K-Pop) இசை தான் வாழ்க்கை. ஆனால் எங்கள் விருப்பத்தை நீங்கள் மதிக்கவில்லை. இந்தியரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு இந்தியரை மணப்பதை விட, எங்களுக்குப் பிடித்த கொரிய கலாச்சாரத்துடன் சாவதே மேல் எனத் தோன்றியது.”
சிறுமிகள் தங்கள் 4 வயது தங்கை ‘தேவு’ குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளனர். “நாங்கள் எங்கள் தங்கையை கொரிய கலாச்சாரப்படி வளர்க்க விரும்பினோம். ஆனால் நீங்கள் அவளை இந்திய பாலிவுட் கலாச்சாரத்திற்கு மாற்றினீர்கள். இதனால் அவளை எங்களிடமிருந்து பிரித்து ஒரு எதிரியைப் போல நடத்தினோம்” என்று அந்த டைரியில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், “தொடர்ந்து அடி வாங்குவதற்காக நான் வாழவில்லை. இந்த உலகில் அடிபட்டு வாழ்வதை விட மரணம் மேலானது” என்று ஒரு சிறுமி தனது மனக்குமுறலை எழுதியுள்ளார்.
இந்த டைரியில் கொரிய நாடகங்கள், கே-பாப் இசைக்குழுக்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த நீண்ட பட்டியலை அவர்கள் எழுதியுள்ளனர். வெளிநாட்டு கலாச்சாரத்தின் மீதான அதீத ஈர்ப்பு மற்றும் குடும்பத்தினரின் கண்டிப்பு ஆகியவையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் இப்படி விபரீத முடிவை எடுத்திருப்பது காசியாபாத் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
