திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வழக்கறிஞரான பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஸ்வீட் கடையில் 400 ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கியுள்ளார். அந்த கடை நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட காகிதப்பைக்கு 20 ரூபாய் சேர்த்து பரமசிவனிடம் 420 ரூபாய் வாங்கியுள்ளனர். இதனால் 20 ரூபாயை பரமசிவன் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் 20 ரூபாயை தர மறுத்துவிட்டனர்.
இதனால் பரமசிவன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் காகிதப்பைக்கு 20 ரூபாய் வசூலித்தது முறையற்ற வாணிபம் என கூறியுள்ளனர். மேலும் ஸ்வீட் நிறுவனத்தினர் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக பரமசிவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.