விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பாரதிநகரில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வம் முத்துமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஒரு வருடத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்ப்பமான முத்துமாரி பிரசவத்திற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று காலை திடீரென முத்துமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது தொப்புள்கொடி பிரிந்து விட்டதால் கர்ப்பப்பையில் இருந்த பெண் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து உடல்நிலை மோசமானதால் முத்துமாரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி முத்துமாரியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த முத்துமாரியின் உறவினர்கள் டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் தாயும், குழந்தையும் இறந்து விட்டதாக குற்றம் சாட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சங்குமணி கூறியதாவது, பிரசவத்தின் போது முத்துமாரிக்கு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் முத்துமாரியையும், குழந்தையையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது என கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.