கன்னியாகுமரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழக அரசியலில் விஜய் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார் எனத் தெரிவித்தார். அப்போது ரயிலில் பயணம் செய்தபோது தன்னிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். “காங்கிரஸ் கட்சிக்குத் தவெக மீது தான் காதல் இருக்கிறது; ஆனால் ஏற்கனவே திமுகவுடன் திருமணம் (கூட்டணி) செய்துகொண்டுவிட்டோமே என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கிறது” என நாஞ்சில் சம்பத் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய நிகழ்வுகளை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும் அவர் பட்டியலிட்டார்:

திருவண்ணாமலையில் திமுகவின் பிரம்மாண்ட இளைஞரணி மாநாடு நடந்த அதே நாளில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் ஒட்டுமொத்த கவனமும் விஜய் பக்கம் திரும்பியது.

 ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் ஊர்வலம் நடத்தியபோது, அதே நாளில் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தார். இதனால் தொலைக்காட்சிகளில் தவெக செய்திகளே ஆதிக்கம் செலுத்தியது.

எதிரியை எங்கே, எப்போது, எப்படித் தாக்க வேண்டும் என்ற வித்தை விஜய்க்குத் தெரிந்திருப்பதாக நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினார்.

தற்போது அனைத்துக் கட்சிகளும் தவெக என்கிற நந்தவனத்திற்கு வரத் தயாராக இருப்பதாகவும், வரும் தேர்தலில் விஜய் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.