கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்த குழந்தை பாலியல் கொலை சம்பவத்தின் எதிரொலியாக, தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களைச் சேகரிக்கத் தவறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
சிப்காட் தொழில்பேட்டை வளாகங்களில் இயங்கும் பல தனியார் நிறுவனங்கள், அங்கு வேலைக்கு அமர்த்தப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் முறையான ஆவணங்களைப் பராமரிப்பதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் வசம் உள்ள தொழிலாளர்களுக்குக் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்பது குறித்தும், உள்ளூர் சட்டதிட்டங்கள் குறித்தும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதனைத் தவறும்பட்சத்தில் நிறுவன நிர்வாகிகளே அதற்குப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் மாவட்ட காவல்துறை தங்களது சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
