தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதோடு, கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய அவர், “ஏழைகளுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆர் மற்றும் பெண் சிங்கமாக ஆட்சி செய்த ஜெயலலிதாவின் வழிவந்தவர்கள் நாம். நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை” என்று முழங்கினார்.
மேலும், 2026 தேர்தலைப் பற்றிப் பேசிய அவர், “யார் துரோகி, யார் நண்பன் என்பது எனக்குத் தெரியாது; மக்களின் நலனுக்காகவும், கௌரவமான இடங்களுக்காகவும் மட்டுமே கூட்டணி அமையும். அமமுக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். எங்களது நிர்வாகிகள் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள்” என்று அதிரடி காட்டினார். குறிப்பாக, “ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி” என்று அவர் கூறியிருப்பது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அவர் குறிப்பிட்ட ‘கௌரவமான இடம்’ மற்றும் ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்ற வார்த்தைகள், அவர் விஜய்யின் தவெக-வுடன் கைகோர்க்க அதிக வாய்ப்பிருப்பதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
