பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சக்வால் மாவட்டத்தில், விடுமுறையைக் கழிக்க வந்த ஆஸ்திரேலிய-பாகிஸ்தான் வம்சாவளி குடும்பத்தினர் மீது போலீஸார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி ஹனியா அகமது பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த அதீல் அகமது, அவரது மனைவி டாக்டர் சித்ரா கான் மற்றும் இரு குழந்தைகள் சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர்.

கடந்த புதனர் அன்று இரவு, வாடகை காரில் இரவு உணவிற்காகச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுதக் கொள்ளையர்கள் இவர்களை வழிமறித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவசர உதவி எண்ணுக்கு அழைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு ‘க்ரைம் கன்ட்ரோல் டிபார்ட்மென்ட்’ (CCD) போலீஸார் விரைந்தனர். ​போலீஸாரைக் கண்டதும் கொள்ளையர்கள் தப்பியோட, பயத்தில் அந்த வாடகை காரும் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுள்ளது.

காரில் கொள்ளையர்கள்தான் தப்பிச் செல்கிறார்கள் என்று தவறாக நினைத்த போலீஸார், கார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி ஹனியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சிறுமியின் மரணம் குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸின் கீழ் செயல்படும் CCD போலீஸாரின் அத்துமீறலையே இந்தச் சம்பவம் காட்டுவதாக பாகிஸ்தானின் முன்னாள் மத்திய அமைச்சர் மூனிஸ் எலாஹி கடும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அமைப்பினால் கடந்த ஓராண்டில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்டோர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.