சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடி 52 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. போலி ஆவணம் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி போலீசார் மேற்கொள்ளும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.