சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வந்த முனியப்பன் (29) என்ற நபர், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, 9 வயது சிறுமியிடம் “விளையாடலாம்” என்று கூறி, கயிற்றைக் கொண்டு அந்தச் சிறுமியின் கை, கால்களை கட்டி வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பயந்து போன அந்த சிறுமி, அதைத் தன் தாயிடம் கதறி அழுது கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது தாய், துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார். போலீசார் அதைப் புகாராக எடுத்துக் கொண்டு, குழந்தைகளை பாதுகாக்கும் “போக்சோ சட்டம்” படி முனியப்பனை கைது செய்து வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி நசிமா பானு வழக்கை பரிசீலித்து, அனைத்து சாட்சியங்களையும் பார்த்த பிறகு தீர்ப்பு கூறினார். அதில், முனியப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். அந்த அபராதத்தை செலுத்தாவிட்டால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு ₹4 லட்சம் இழப்பீடு கொடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீலாக லட்சுமி பங்கேற்று வாதாடினார்.