வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், 40 வயது மதிக்கத்தக்க இந்து விதவை பெண் ஒருவரை இரண்டு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை மரத்தில் கட்டி வைத்து மொட்டை அடித்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் காலிகஞ்ச் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த சில ஆண்டுகளாக ஷாஹின் என்பவரிடம் நிலம் வாங்கி அவர் வசித்து வந்த நிலையில், ஷாஹின் அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை அந்தப் பெண் வீட்டில் இருந்தபோது, ஷாஹின் மற்றும் அவரது நண்பர் ஹசன் ஆகிய இருவரும் அத்துமீறி நுழைந்து அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அந்தப் பெண்ணிடம் சுமார் 50,000 டக்கா பணம் கேட்டு மிரட்டியதோடு, அவர் கூச்சலிட்டதால் அவரை வீட்டின் வெளியே இருந்த மரத்தில் கட்டி வைத்து தலைமுடியை வெட்டி மொட்டை அடித்துள்ளனர்.
இந்த மனிதாபிமானமற்ற செயலை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பரவ விட்டுள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலால் மயக்கமடைந்த அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
வங்கதேசத்தில் ஏற்கனவே இந்து இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டும், எரிக்கப்பட்டும் வரும் சூழலில், தற்போது ஒரு பெண் இவ்வளவு கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, வங்கதேச அரசு சிறுபான்மையினரைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
