தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தைத் தாண்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 97 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020-இல் 68,750-ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, ஆண்டுதோறும் சீராக உயர்ந்து தற்போது இந்த உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 8,505 பேரும், அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 7,295 பேரும், வேலூரில் 6,525 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகர்ப்புறங்களில் நிலவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், மாசுபாடு மற்றும் மன அழுத்தம் ஆகியவையே இந்தப் பாதிப்பு அதிகரிப்புக்கு முதன்மையான காரணங்களாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆண்களைப் பொறுத்தவரை புகையிலை மற்றும் குட்கா பயன்பாட்டால் ஏற்படும் வாய்ப்புற்றுநோய் பாதிப்பு முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்கு மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருவதால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவதோடு சிகிச்சைக்கான செலவுகளும் பல மடங்கு அதிகரிப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இந்த உயிர்க்கொல்லி நோயை முழுமையாகத் தடுக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை போன்ற மாவட்டங்களில் 18 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளும் விழிப்புணர்வு முகாம்களும் அவசரமாகத் தேவைப்படுகின்றன.