திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் சுமார் ரூபாய் 16 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இது குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தரையில் பாலங்கள் கட்டப்படுவது போன்றே நீரிலும் கட்டப்படுவதில்லை.

நீர் நிலைகளில் பாலங்கள் கட்டும்போது நீர்வளத் துறை பொறியாளர் கணக்கீடின்படி பாலங்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது பொறியாளர் மழை வெள்ளம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கன அடி வரும் என்பதை கணக்கிட்டு கூறுவார்.அதன்படியே பொதுவாக பாலங்கள் கட்டப்படும். அதன்படி 52,000 கன அடி மழை நீர் வரும் என்ற அடிப்படையில் தென்பெண்ணை மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டே கால் லட்சம் கன அடி தண்ணீர் வந்ததால் மேம்பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கும்.

ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலங்கள் அதிக அளவில் நீரில் இருப்பதால் அதிக சேதமடைகின்றன. குறிப்பிட்ட கன அடி நீரைத் தாண்டி வெள்ளம் ஏற்படும் போது இவ்வாறு ஆற்றுப் பாலங்கள் நீரில் அடித்து செல்லப்படும் நிகழ்வு இயல்பானதாகும். இதனால் கட்டடத்தின் தரம் குறித்து விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியதாகும். ஆற்றில் கட்டப்பட்ட பாலம் தரம் அற்றதாக கட்டப்படவில்லை எதிர்பாராத வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதமாகும் என அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.