ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூட்டத்தின் இடையே நின்று கொண்டிருந்தபோது, அர்ஜுனன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரசாரக் கூட்டத்தில் நடந்த இந்தத் திடீர் உயிரிழப்பு குறித்துக் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அர்ஜுனனின் உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பது குறித்து மருத்துவமனை அறிக்கைக்குப் பின்பே தெரியவரும்.
