மத்திய கிழக்கில் ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலக நாடுகளை நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை (Ceasefire) அதிரடியாக அறிவித்துள்ளார்.

தான் விதித்த இரவு 8 மணி காலக்கெடு முடிவதற்கு வெறும் இரண்டு மணி நேரமே இருந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்துள்ளார். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த போர் நிறுத்தத்தில் இஸ்ரேலும் ஒரு அங்கம் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதால், அடுத்த 14 நாட்களுக்குத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட 10 அம்ச முன்மொழிவுகளை (10-point proposal) அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுப்பாடு, யுரேனியம் செறிவூட்டலை அனுமதிப்பது, ஈரானுக்கு எதிரான தடைகளை நீக்குவது மற்றும் இப்பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற மிக முக்கியமான கோரிக்கைகள் அடங்கியுள்ளன.

“>

அமெரிக்கா தனது ராணுவ நோக்கங்களை ஏற்கனவே அடைந்துவிட்டதாகவும், ஈரானுடன் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருப்பதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மரண பயத்தில் இருந்த உலக நாடுகளுக்கு இந்த இரண்டு வார கால அவகாசம் ஒரு மருந்தாக அமைந்தாலும், இந்த 14 நாட்களில் ஈரான் தனது நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் ஒரு கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.