அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கலாச்சாரம் இன்று இரவோடு முடிவுக்கு வரும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் அழிக்கப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், “வரலாற்றில் அலெக்சாண்டர் முதல் மங்கோலியர்கள் வரை பலர் எங்களை அழிக்க முயன்றும் ஈரான் இன்றும் நிலைத்து நிற்கிறது, ஒரு நபரின் அச்சுறுத்தலால் எங்கள் தொன்மையான கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவுடனான அனைத்து ரகசியப் பேச்சுவார்த்தைகளையும் ஈரான் அதிரடியாக ரத்து செய்துள்ளது. டிரம்ப் விதித்துள்ள காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ள நிலையில், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்குவது போர்க்குற்றம் என்று நிபுணர்கள் எச்சரித்தாலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுவீசி வருவதாக ஈரான் கூறியுள்ளது.

இந்த மோதல் ஒரு பெரும் உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தச் சூழலை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.