ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ள நிலையில், அமெரிக்காவைத் தனது நிபந்தனைகளுக்குப் பணிய வைத்ததே தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவதற்குள், ஈரான் முன்வைத்த 10 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தாது என்பதோடு, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் முழு கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
மேலும், அணுசக்திக்குத் தேவையான யுரேனியத்தைச் செறிவூட்ட அனுமதி, ஈரானின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது போன்ற ஈரானின் முக்கியக் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது சர்வதேச அளவில் பெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவது மற்றும் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது போன்ற நிபந்தனைகளும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்த இரு வார கால போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பிறகும், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொடங்கவுள்ளது.
டிரம்பின் கடுமையான மிரட்டல்களைத் தொடர்ந்து ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிய நிலையில், தற்போது எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையை ஈரான் தனது இறையாண்மைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கொண்டாடி வருகிறது.
