இந்தியாவிலிருந்து வெறும் 2,500 கி.மீ தொலைவில் உள்ள லாவோஸ் நாட்டிற்குச் சென்றால், ஒரு கப் தேநீர் குடிக்கவே நீங்கள் 20 ஆயிரம் ரூபாய் பில் தர வேண்டியிருக்கும். கேட்கவே மலைப்பாக இருந்தாலும், இது அந்த நாட்டின் நாணய மதிப்பான ‘கிப்’ கணக்கில்தான்.
இந்திய ரூபாயோடு ஒப்பிடும்போது லாவோஸ் நாட்டுப் பணத்தின் மதிப்பு மிகவும் குறைவு என்பதால், அங்கு செல்லும் சாதாரண இந்தியர்கள் கூட லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் வலம் வர முடியும். உதாரணமாக, அங்கு நீங்கள் கொடுக்கும் 20,000 கிப் என்பது நமது இந்திய மதிப்பில் வெறும் 50 ரூபாய்தான்.
இதனால் குறைவான பட்ஜெட்டில் வெளிநாடு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு லாவோஸ் ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது. தற்போது ஒரு இந்திய ரூபாய்க்கு சுமார் 232 லாவோ கிப் கிடைப்பதால், அங்கு ஒரு ஹோட்டல் அறையின் வாடகை ஒரு லட்சத்தைத் தாண்டினாலும் இந்திய மதிப்பில் அது வெறும் 500 முதல் 2,000 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த நாட்டில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் லட்சக்கணக்கில் செலவு செய்தாலும் உங்கள் பாக்கெட் காலி ஆகாது என்பதே இதன் சிறப்பு. இந்தியர்களுக்கு ‘விசா ஆன் அரைவல்’ வசதி வழங்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த மலிவான மற்றும் அழகான நாட்டிற்குப் பயணம் செய்து கோடீஸ்வரர் உணர்வைப் பெறுகிறார்கள்.
