விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் மாநில நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.  கடந்த மாதம்  17ஆம் தேதி பட்டனூரில் நடந்த சிறப்பு பொதுக்குழுவில், கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் ராமதாசிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்தக் காலக்கெடு முடிந்தும், அன்புமணி இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை என்பதையடுத்து, கட்சி நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

அன்புமணியின் மறுமொழி இல்லாததால், கடந்த 9ஆம் தேதி, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடி, நோட்டீஸ் பதில் பெறப்படாததைக் கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து, அதற்கான  அறிக்கையை ராமதாசிடம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி, முரளிசங்கர், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உள்ளனர். ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வைத்தியலிங்கம் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில், அன்புமணிக்கு எதிராக தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களாக பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்த நிர்வாகக் குழு கூட்டத்தின் முடிவுகள் முக்கிய திருப்பமாக ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மணிநேரங்களில், அன்புமணி மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெளிவாகும் என கூறப்படுகிறது.