நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான விவகாரத்தில், தங்களது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு முதலில் ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில், சென்சார் போர்டு தரப்பு விளக்கங்களைக் கேட்காமல் இடைக்காலத் தடை உள்ளிட்ட எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாகப் பிறப்பித்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்யவே இந்த ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப் போராட்டத்தால் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு குறித்த பரபரப்பு சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. மேலும் ஏற்கனவே ஜனநாயகன் படக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் சென்சார் போர்டு தங்களது வாதங்களை கேட்காமல் தீர்ப்பு வழங்கக்கூடாது என மனு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு உயர்நீதிமன்றம் விசாரிக்குமாறு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
.
