பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு அங்கமாகும் என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, பெண்களின் கண்ணியம் மற்றும் கல்வி கற்கும் உரிமையோடு நேரடித் தொடர்புடைய அடிப்படை உரிமை என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மாதவிடாய் காலங்களில் போதிய விழிப்புணர்வும், வசதிகளும் இல்லாத காரணத்தால் மாணவிகளின் கல்வி தடைபடக்கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருப்பதை இந்தத் தீர்ப்பு பறைசாற்றுகிறது.

அதன்படி நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா மாதவிடாய் நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறும் பள்ளிகளின் அங்கீகாரம் அல்லது உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் அரசு, தனியார்  பள்ளிகளில் முறையான மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி  கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரமான மேலாண்மை முறைகளை மேம்படுத்த விரிவான தேசியக் கொள்கையை உருவாக்குமாறு மத்திய அரசுக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.