தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சபின் தேர்தல் அதிகாரிகளிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான ராஜேஷ்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளதாக தவெக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
அமைச்சர் ராஜேஷ்குமாரின் தேர்தல் வெற்றியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தவெக வேட்பாளர் சபின், தங்களுக்குச் சாதகமாக இருந்த வாக்குகள் முறையாகக் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். தேர்தல் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், இந்த முறைகேடுகளை எதிர்த்து தவெக தலைமை மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையோடு விரைவில் நீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றில் அமைச்சருக்கு எதிராகவே அந்த கட்சியின் வேட்பாளர் புகார் கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
