தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சையைக் கைப்பற்றியுள்ள நிலையில், திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. மேலும், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில், பாஜகவிலிருந்து வெளியேறிய அண்ணாமலை, ‘வீ தி லிடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
தன் இயக்கம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், தமிழகத்தில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட நமது இயக்கம், மக்களின் பேராதரவோடு வெறும் மூன்றே நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தற்போதைய சூழலில் தான் உட்பட யாருக்கும் இயக்கத்தில் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை என்றும், நிரந்தரப் பதவி என்பது தங்கள் இயக்கத்தில் இருக்காது என்றும், இந்த ஒரு மாத காலம் உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.அதே வேளையில், தன் பெயரைப் பயன்படுத்துபவர்களுக்கு அண்ணாமலை மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அதில், “சில தன்னார்வலர்கள் எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி சில இயக்கங்களைத் தொடங்கி, மாவட்ட வாரியான பொறுப்புகளையும் அறிவித்து வருகின்றனர்.
இதற்கும் நமது இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கனவே அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் wetheleader.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் பணிவன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
