கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (30), இவரது மனைவி ஜனனி (27). எட்டு மாத கர்ப்பிணியான ஜனனி மற்றும் இவர்களது 3 வயது குழந்தையுடன் குடும்பத்தினர் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

அரவக்குறிச்சி அடுத்த ஈ.சநத்தம் பிரிவு சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே திடீரென இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது.
அதன் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டியவர் சாமர்த்தியமாக இடதுபுறம் திருப்பியுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மிக பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நசுங்கியதில், அரவிந்த், ஜனனி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.